சென்னை: ''ஜென்டில்மேன்' படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார், மெகா தயாரிப்பாளரான கே. டி. குஞ்சுமோன். அதனை தொடர்ந்து 'ஜென்டில்மேன் 2 ' படம் உருவாகவுள்ளதாகவும், இதனை 'ஆஹா கல்யாணம்' புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கவுளதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கபட்டது.
இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ), இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர். படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருக்கும் என்றும் கூறினார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
'ஜென்டில்மேன்' படத்தில் புது இயக்குநருக்கு உறுதுணையாக நேஷ்னல் அவார்ட் வின்னர் ஜீவாவை ஒளிப்பதிவாளராக நியமித்தது போல், இதன் இரண்டாம் பாகத்திலும் அனுபவம் வாய்ந்த அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி பிரம்மாண்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானவர்.
அஜயன் வின்சென்டின் அன்னமய்யா, ருத்ரமாதேவி, டாம் 999 போன்ற படங்களின் ஒளிப்பதிவு வெகு பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இதே கம்பெனியில் 'ரட்சகன்' படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். படத்தின் கதாநாயகன், மற்ற நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகளும் உடனேயே எதிர்பார்க்கலாம் என்றும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'லோகேஷ் ஒரு ஜீனியஸ்' - விக்ரம் வெற்றி விழாவில் அனிருத்