சென்னை: இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் பிரபு, வடிவேலு, நடிகை ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்போது இந்த திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு காலம் திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பி.வாசு தனது 65 ஆவது படமாக 'சந்திரமுகி 2' (Chandramukhi 2) என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
நடன இயக்குனர் கலா மாஸ்டர்:சந்திரமுகி 1 எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரொம்ப அழகா பண்ணி இருக்காங்க. சந்திரமுகி 2 படத்தில் நான், கங்கனா ரனாவத் கிளாசிக்கல் பாடல்களுக்கு நடன இயக்குனராக பண்ணி இருக்கேன். சந்திரமுகி 1 படத்தில் நான் 'ரா ரா' பாடலுக்கு நடன இயக்குனராக பண்ணி இருந்தேன். படத்தை பற்றி வெளியே சொல்லக் கூடாது. நீங்க பாருங்க அப்போது தெரியும் என்று கூறினார்.
இயக்குனர் பி.வாசு பேசும் போது:இந்த படத்தை பற்றி உங்களிடம் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இந்த படத்தில் இருக்கும். ராகவா லாரன்ஸ் இந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமாக பண்ணி இருக்கிறார். கங்கனாவும் மொழி தெரியாமல் இந்த படத்தில் நன்றாக பண்ணி இருக்கிறார். சந்திரமுகி 1 முழுவதுமாக முடிந்து விட்டதால், சந்திரமுகி 2க்கு புதுக்குழு போடப்பட்டது. படத்தில் வடிவேலு அவர்களிடம் தான் அந்த வீடு இருக்கிறது என தெரிவித்தார்.
நடிகை மகிமா நம்பியார்:இது ஒரு பெரிய படம், இந்த மாதிரியான ஒரு பெரிய படத்தில் ஒரு நிரந்தர கதாபாத்திரம் பண்ணுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க என்று தெரிவித்தார்.