சென்னை: Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில் சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அயோத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற வெற்றி விழாவில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் நடிகை ரோகிணி பேசியதாவது, ”இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது அயோத்தி திரைப்படம். இதில் உழைத்த அனைவரையும் மேடை ஏற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி ஒரு கதையை நம்பி தயாரித்த தயாரிப்பாளர், உடன் நின்ற நடிகர் சசிகுமார் இருவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்
நடிகர் சாந்தனு பேசியதாவது, ”இந்த விழாவில் கலந்துகொள்ள அப்பா சார்பில் வந்துள்ளேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இந்தப் படம் வந்த போதே என்னை பார்க்க சொன்னார். படம் பற்றி புகழ்ந்து வாழ்த்தினார். நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அவ்வளவு அற்புதமான படைப்பு. படம் வெளியாகி மூன்று நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் காலத்தில் இது உண்மையான வெற்றி. சசிகுமார் அண்ணா உண்மையில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி விட்டார். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்”.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது, ”இந்த திரையரங்கு பழைய நினைவுகளை தருகிறது. அண்ணாமலை, பாட்ஷா 25வது வாரம் கோலாகலமாக இங்கு ஓடின. இந்த காலத்தில் 50 நாட்களை கடப்பது அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது அயோத்தி. இந்த கதையை நம்பி தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படி ஒரு கதையை புதுமுக இயக்குநரை நம்பி எடுப்பது மிகப்பெரிய விஷயம். இது ஒரு அற்புதமான படைப்பு.
இந்தக்கதை ஓடும் என நம்பிய படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சசிகுமார் பேசிக்கொண்டிருக்கும் போது கதை தான் ஹீரோயிசம் என்றார், அது முழுக்க உண்மை. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்குவது போல் இயக்கியிருகிறார் மந்திரமூர்த்தி. யஷ்பால் ஆளவந்தானில் நடித்திருந்தார், இதில் பின்னியிருக்கிறார். அந்த சின்னப் பெண் மிரட்டிவிட்டார். மொழி ஒரு தடையாகவே இல்லை. இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்”.
நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பேசியதாவது, “உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. தமிழில் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். எனக்கு வாய்ப்பளித்த மூர்த்தி, ரவீந்திரன், சசிகுமாருக்கு நன்றி. அயோத்தி படம் மனித நேயத்திற்கு மொழி இல்லை என்பதை சொல்கிறது, அனைவரும் அதை பின்பற்றுவோம் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி”.
நடிகர் யஷ்பால் சர்மா பேசியதாவது ”நீங்கள் காட்டும் அன்பும், பாராட்டுகளும் விருதை விட மிகப்பெரியது. என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு மிகப்பெரிய நன்றி. சசிகுமாரும், நானும் வெகு நட்போடு இருந்தோம், அவருக்கு என் நன்றி. கோவிட் காலத்தில் பல தடங்கலுக்கு மத்தியில் இந்தப் படத்தை எடுத்தார்கள். நான் நடித்ததில் மிகச்சிறந்த படம். அனைவருக்கும் என் நன்றி”.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பேசியதாவது ”படத்தை பற்றி அனைவரும் புகழ்ந்து விட்டார்கள். படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இன்னும் இது போல் படங்கள் செய்ய இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது, அனைவருக்கும் நன்றி”.