சென்னை: பாஜகவின் கட்சி நிர்வாக பொதுக்கூட்டம் மற்றும் பாஜக ஆட்சி 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டங்களில் பங்கேற்க கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தார். அப்போது அவரை தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரும் சந்தித்துள்ளனர். பாஜக தரப்பின் அழைப்பின் பேரில் தான் இவர்கள் எல்லாம் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாஜக சார்பில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள கட்சியில் அல்லாத திரை பிரபலங்களை அழைக்க பாஜக தரப்பு நினைத்துள்ளது. இது வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உதவும் என்பதும் அவர்களது கணக்கு. ஜிவி.பிரகாஷ் சந்திப்பு கூட இதன் தொடக்கம் தான் என்கின்றனர். இதே போல் நடிகர் விஷாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஷால் அமித் ஷாவை சந்திக்க பிடி கொடுக்கவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பு இருந்ததால் அவரால் வர முடியவில்லை என்கின்றனர்.
ஆனால் விஷாலை எப்படியாவது கட்சியில் இணைந்து விட வேண்டும் என்று பாஜக தரப்பு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் சமீபத்திய செயல்பாடுகளை பாஜக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றி, ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டது போன்ற விஷாலின் நடவடிக்கைகள் பாஜக தரப்பில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.