சென்னை: 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. இதில், பல சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றன. இந்த ஆண்டின் சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி:இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'அயோத்தி'. அயோத்தியில் வாழும் யஷ்பால் சர்மா தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருகிறார். அப்போது மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் செல்லும் போது யஷ்பால் சர்மாவின் அலட்சியத்தால் பெரும் விபத்து நிகழ்கிறது. இதில் யஷ்பால் சர்மாவின் மனைவி இறந்து போக, தனது சொந்த ஊருக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல முடியாமல் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்.
அந்த நேரத்தில் கார் ஓட்டுநரின் நண்பர்களாக வரும் சசிகுமார், புகழ் இருவரும் ஒரே நாளில் விமானத்தில் உடலை எடுத்துச் செல்ல எவ்வாறு உதவுகின்றனர் என்பதே கதை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் இயல்புத் தன்மை ரசிகர்களைக் கவர்ந்தது. சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரித்தி அஸ்ரானி ஆகியோர் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. அயோத்தி என்ற பெயருடன் மனிதநேயம் பற்றிப் பேசிய இப்படத்தை ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடினர்.
டாடா:இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'டாடா'. கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரியிலிருந்தே காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கருவுரும் அபர்ணா கருவைக் கலைக்க மறுக்கிறார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த பிறகு தினசரி வாழ்க்கையில் இருவருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அபர்ணா தாஸ் கவினைப் பிரிந்து செல்கிறார்.
ஆண் குழந்தை தந்தையான கவினின் அரவணைப்பில் எப்படி வளர்கிறது, கவின் அபர்ணா இறுதியில் இணைந்தார்களா என்பதே கதை. கவின், அபர்ணா தாஸ் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவர்ந்தது. பொறுப்பற்ற கல்லூரி இளைஞனாக இருந்து, பின்னர் பொறுப்புள்ள தந்தையாகக் கவினின் முதிர்ச்சியான நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர். டாடா படத்தில் இடம்பெற்ற வசனங்களை ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் இணைத்துப் பார்க்க, இன்று வரை ரீல்ஸ்களாக வலம் வருகிறது. முதல் படத்திலேயே இயக்குநர் கணேஷ் பாபு ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்துள்ளார்.
விடுதலை:வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘விடுதலை’. அருமபுரி மலைக் கிராமத்தில் சுரங்கம் தோண்டப் பன்னாட்டு நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அக்கிராம மக்களுக்கு விஜய் சேதுபதி போராட்டக் குழுவினருடன் துணை நிற்கிறார். விஜய் சேதுபதியைப் பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியான சூரி, பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இறுதியில் விஜய் சேதுபதி பிடித்தாரா என்பதே கதை.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட விசாரணை படத்தில், ரத்தமும் சதையுமான காட்சியமைப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வசன உச்சரிப்பு, ரொமான்ஸ் என தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். விடுதலை திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு மகுடம் என ரசிகர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டினர்.
குட் நைட்:விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரெய்சல், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘குட் நைட்’. தூங்கும் போது வரும் குறட்டையால் மணிகண்டன் இல்லற வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனையைச் சந்திக்கிறார். தனது கணவன் விடும் குறட்டையால் தூக்கம் இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்படும் மீதா, அவரை பிரிய முடிவு எடுக்கிறார். இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் ஒன்லைன்.
மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியில் நடக்கும் கதையை இயக்குநர் தனது கதாபாத்திரங்களின் மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்திய விதத்தில் ரசிகர்கள் மனதை வென்றார். மணிகண்டன் மிடில் கிளாஸ் இளைஞனாக வரவேற்பைப் பெற்றார். மேலும் மணிகண்டன் அக்காவாக நடித்த ரெய்சல், மாமாவாக வரும் ரமேஷ் திலக் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றனர். இந்த வருடத்தின் சிறந்த ஃபீல் குட் மூவி என 'குட் நைட்' படத்தைச் சொல்லலாம்.
போர் தொழில்:அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'போர் தொழில்'. சென்னையில் காவல்துறையில் இணையும் அசோக் செல்வன் எஸ்.பியாக பணிபுரியும் சரத்குமாரிடம் உதவியாளராக பணிபுரிகிறார். பெண்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொலை செய்யும் கொலைகாரனைப் பிடிக்கும் வழக்கு சரத்குமார் மற்றும் அசோக் செல்வனிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா என்பதே கதை.
ஏற்கனவே தமிழ் ஆடியன்ஸ் பல க்ரைம் த்ரில்லர் பார்த்திருந்தாலும், இப்படத்தில் போலீஸ் விசாரணை குறித்து விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கறாரான போலீசாக சரத்குமாரும், பயந்த சுபாவத்துடன் வரும் அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. குற்றவாளியைப் பிடிப்பதில் திரைக்கதையில் காட்டிய வித்தியாசம் மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களிலிருந்து போர் தொழில் தனித்து நிற்கிறது.
மாமன்னன்:மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் ‘மாமன்னன்’ அவரது கல்லூரி தோழி கீர்த்தி சுரேஷுக்கும் மாவட்டச் செயலாளராக வரும் ஃபகத் ஃபாசில் தரப்பிற்கும் மோதல் ஏற்படுகிறது. அந்த விஷயத்தில் எம்.எல்.ஏ வடிவேலுவின் மகன் உதயநிதி சமரசம் பேசப் போக ஃபகத் ஃபாசிலுக்கும், உதயநிதிக்கும் சண்டை ஏற்படுகிறது. அந்த சண்டையில் சமரசம் பேசும் வடிவேலுவை ஃபகத் ஃபாசில் சமமாக நடத்தாமல் அவமானப்படுத்துகிறார்.