சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இந்த 2023ஆம் ஆண்டு மிக அருமையான ஆண்டு என்றே சொல்லலாம். மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகமான வசூலை குவித்தன. குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டவர்களின் படங்கள் நல்ல வசூலைக் கொடுத்தன.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் அறிமுக இயக்குநர்கள் பலர் இந்த 2023-இல் தமிழ் சினிமா ரசிகர்களை அதிக அளவில் கவனம் ஈர்த்தனர். வித்தியாசமான கதை, கதை சொல்லும் விதம், அருமையான திரைக்கதை என தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தனர்.
கணேஷ் கே பாபு:கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் 'டாடா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகி இருந்தது, இப்படம்.
விடலைப் பருவ காதலும், அதன் பிறகான வாழ்க்கைப் பொறுப்பும் பற்றி இப்படம் பேசியது. சிங்கிள் ஃபாதராக கவின் தனது நடிப்புத் திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருந்தார். ஜாலியான கதையில் ஆங்காங்கே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை உருக வைத்திருப்பார், இயக்குநர். மிகக்குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.
ஆர்.மந்திரமூர்த்தி:இந்த ஆண்டில் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் மிக முக்கியமான படம், அயோத்தி. சசிகுமாருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலத்துக்கும் பெயர் சொல்லும் படமாக அயோத்தி அமைந்தது. சக மனிதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல், இயல்பான கதை சொல்லல் முறையில் கவனம் ஈர்த்தார், அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி.
இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருந்து தமிழ்நாடு வரும் வட இந்திய குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்னையை, தமிழகத்தின் ஒரு ஊரில் இருக்கும் ஒருவர் தீர்த்துவைக்கும் கதையில் அன்பு, மனிதம், இரக்கம், அரசியல் என அனைத்து உணர்வுகளையும் புகுத்தி ,இறுதியில் நம்மைக் கண்கலங்கச் செய்தார் இயக்குநர். நிச்சயம் இந்த ஆண்டின் வெளியான படங்களில் சிறந்த படம் 'அயோத்தி' என்று சொல்லலாம்.
விநாயக் சந்திரசேகரன்: குறட்டை விடுவது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்பவர்கள் உண்டு. அப்படி அந்த சாதாரண குறட்டை பிரச்சினையைக் கருவாக வைத்து குட்நைட் படம் மூலம் வென்றிருந்தார், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் அவ்வளவு இயல்பாக நடித்திருந்தனர்.
விக்னேஷ் ராஜா:தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான 'போர் தொழில்' திரைப்படம், மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இதுதான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.