ஹைதராபாத்:பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் உலகமெங்கும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. பாகுபலி திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை பெற்றது. இந்திய அளவில் 1000 கோடி வசூலை பெறும் முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. பாகுபலி படத்தில் ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நடிகர் பிரபாஸை பாராட்டும் வகையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சாமுண்டிஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையின் தோற்றம் குறித்து பாகுபலி திரைப்படக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் சோபு யார்லகட்டா, நடிகர் பிரபாஸின் சிலை தனக்கு பிடிக்கவில்லை என பகிரங்கமாக அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் சோபு யார்லகட்டா தனது X பக்கத்தில் "சாமூண்டிஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் சிலை வைப்பதற்கு தங்கள் அனுமதி பெறவில்லை என கூறியுள்ளார். மேலும் அருங்காட்சியக நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ள தயாரிப்பாளர், நடிகர் பிரபாஸ் சிலை முறையான அனுமதி மற்றும் லைசென்ஸ் பெற்று வடிவமைக்கப்படவில்லை. நாங்கள் இந்த சிலையை அருங்காட்சியகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அருங்காட்சியக நிர்வாகம் பிரபாஸின் மெழுகு சிலையை அகற்ற முடிவு செய்துள்ளது. அருங்காட்சியகத்தின் உரிமையாளர் இதுகுறித்து தெரிவித்துள்ள தகவலில், "பாகுபலி படத்தின் தயாரிப்பாளர், பிரபாஸ் சிலை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். நாங்கள் யாருடைய உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால் நாங்கள் இந்த சிலையை அகற்ற முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'2018' மலையாள படம் 96வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!