சென்னை: இயக்குநர் ரவிக்குமார் 'இன்று நேற்று நாளை' என்ற டைம் டிராவலை மையமாக கொண்ட படத்தை இயக்கியதன் மூலம், யார் இந்த இயக்குநர் என்று ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்கிற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர், "இன்று நேற்று நாளை" படத்தின் வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தனக்கென தனி அடையாளைத்தை உருவாக்கி கொண்டார்.
அறிவியல் ஃபேண்டஸி படங்களை எடுப்பதில் ஆர்வம் மிகுந்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து என்ன படம் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்படத்திற்கு "அயலான்" என பெயரிடப்பட்டது. மேலும், ஏலியனை மைய்யமாகக் கொண்டு உருவாகும் படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். "அயலான்" படத்தின் பணிகள் தொடங்கி பல வருடங்கள் கடந்தும், பல்வேறு தடைகள் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் வெளியீடு தாமதமானது.
இந்நிலையில் "அயலான்" படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் கவனத்துடன் படக்குழுவினர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.