சென்னை: இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கும் 'மின்மினி' படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம் என பார்க்கப்படுகிறது. முன்னணி இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த கதீஜா ரஹ்மான், ஏற்கனவே பல பாடல்களில் தனது குரலில் பாடி இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார்.
தற்போது 'மின்மினி' படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை ஹலிதா சமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாகக் காத்திருந்து ஒரு திரைப்படத்தைப் படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் குழந்தை பருவத்திலும், இளமை பருவத்திலும் அவர் அவர்களையே நடிக்க வைத்துள்ளார் ஹலிதா ஷமீம், இதற்காக எட்டு ஆண்டுகள் வரை காத்திருந்தார்.
படப்பிடிப்பின் முதல் கட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடைந்ததைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கதீஜா ரஹ்மானோடு பணி புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், கதீஜா அற்புதமான பாடகர் மட்டுமின்றி திறமை வாய்ந்த இசை அமைப்பாளரும் கூட, அவருடைய அற்புதமான இசை விரைவில் வரவிருப்பதாக தெறிவித்துளார்.