சென்னை:தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தனது இசை ஆளுமையை நிரூபித்தவர். இரண்டு ஆஸ்கர் விருது பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். மேலும், பல்வேறு நாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் இசை ரசிகர்களை மகிழ்வித்து வருபவர்.
தற்போது இசை அமைப்பாளர்கள் எல்லோரும் தனியாக ஊர், ஊராகச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவரது “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த 12ஆம் சென்னையில் நடைபெற இருந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், சென்னையில் பெய்த மழை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் நெருக்கமான நண்பர்களுக்கு, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.