கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அலுவல் மொழிகள் சம்மந்தமான கூட்டத்தில், அனைவரும் ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டு ஹிந்தியை இணைப்பு மொழியாக கற்க வேண்டுமென பேசியது பல்வேறு எதிர்வினைகளையும், ஆதரவுகளையும் சம்பாதித்தது. மேலும், அது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ”தமிழ் தான் இணைப்பு மொழி” எனப் பதிலளித்தார். அவரது இந்தப் பதில் பல ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசான பாஜகவினர் மற்றும் அதனின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஒரே மாதிரியாக ட்வீட் செய்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. “தமிழால் இணைவோம் #TamilConnects" என இருவரும் அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவித்திருந்தனர். இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள், இருவரும் இணைந்து அடுத்து ஒரு ஆல்பம் பாடல் தயாரிக்கவுள்ளனர் என்றும், அதற்கான அறிவிப்பு முன்னோட்டம் தான் இந்த ட்வீட் என்றும் பேசி வருகின்றனர்.
இருப்பினும், பலர் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஆதரவான பதிவை தான் இருவரும் பதிவிட்டதாக கருதுகின்றனர். ஏற்கெனவே இருவரும் சேர்ந்து தயாரித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ‘பீப் சாங்’ எனும் ஆல்பம் பாடல் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை 'பீஸ்ட்' ரிலீஸ்: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!