சென்னை:அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதாநாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில் இந்த கதையை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்த கதையை கூறிய போது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள்.
இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலாபாலை சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், 'பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரை தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு வேறாகவே இருந்தது.
பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார். 2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கினோம்.
இடையில் கரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் பணிகளை நிறைவு செய்தோம். படத்தை வெளியிட நினைத்த போது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம்.
பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது 'கடாவர்' திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியதுடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தியுள்ளது. இதற்காக நாங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடாவர் - ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம்” என்றார்.