சென்னை: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம், ஃபர்ஹானா. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே 5) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மனுஷ்யபுத்திரன், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ஜித்தன் ரமேஷ், கிட்டு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நிகழ்வில் பேசிய நடிகர் கிட்டி, "நான் நடித்த முதல் 5 கதாபாத்திரங்கள் என்றால், இந்த படத்தின் கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும். கவித்துவம் வாழ்ந்து நிறைந்த படம் இது. மனிதத்தின் உண்மையான தேவைப் பிணைப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவைகள் நிறைந்த படமாக இயக்கி உள்ளார்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், "ஒரு வழியாக படம் வெளியாகிறது. காரணம் 2 வருடமாக தாடி உடனே சுற்றிக் கொண்டிருந்தேன். இந்த படத்திற்காக நான் 7 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளேன். படத்தில் எனது காஸ்டியூம்களை பார்த்தால் பிச்சை எடுப்பது போல இருக்கும்" என்றார்.
மேலும், எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் பேசுகையில், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் வசனம் எழுதிய ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியானது என்று ஒவ்வொரு முறையும் போன் வந்தது. அப்படி 5 படங்களுக்கு மேல் வெளி வந்தது. ஆனால், தற்போதுதான் இந்த படம் வெளியாக உள்ளது. ஒரு படத்தில் கேமரா நன்றாக இருந்தாலும், நடிப்பு நன்றாக இருந்தாலும், திரைக்கதை நன்றாக இல்லை என்றால் அந்த படத்தை பார்க்கவே முடியாது. இந்த படத்தின் கதையை என்னிடம் வசனம் எழுதச் சொல்லி கொடுத்த போது ஒரு நாவலை போன்று இருந்தது. ஒரு பெண் தன்னை தக்க வைத்துக் கொள்ள தினமும் பல போராட்டங்களை செய்து வருகிறார். வெளியே பாதுகாப்பிற்காக காவல் துறையினர் எல்லாம் நிற்கிறார்கள். இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும், அவர்கள் நினைக்கும் படி இந்த படம் அப்படி இல்லை" என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "கடந்த வருடம் எனக்கு ‘சுழல்’ வெப் தொடர் மற்றும் ஆண்டு இறுதியில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் மட்டும் வெளியானது. தொடர்ந்து அனைத்து விருது விழாக்களிலும் என்னை கூப்பிட்டு விருது வழங்கியவர்கள், கடந்த வருடம் என்னை எந்த ஒரு விழாவிற்கும் அழைக்கக் கூடவில்லை. க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு விருது வழங்காததெல்லாம் எனக்கு மிகப்பெரிய வருத்தம்.