சென்னை:பிரபல மலையாள இயக்குநர் லியோ ஜோஷ் பெள்ளிசேரி இயக்கத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் படம் அருமையாக இருப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் மீதும் அதன் இயக்குனர் மீதும் இயக்குனர் ஹலிதா ஷமீம் புகார் ஒன்றைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இவர் இயக்கிய ஏலே படத்தின் கருத்துக்கள் மற்றும் அழகியல் இரக்கமில்லாமல் கிழித்தெறியப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஏலே திரைப்படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டமான கதையை நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட படம்தான் ஏலே. இப்படம் எடுக்கப்பட்ட அதே ஊரில்தான் நண்பகல் நேரத்து மயக்கம் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹலிதா ஷமீம் தனது பதிவில், “ஏலே படத்திற்காக ஒரு கிராமத்து மக்களைப் படப்பிடிப்பிற்காகத் தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்துச் பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியைத் தருகிறது.