சென்னை: தமிழ் திரைத்துறை வரலாற்றில் அவ்வப்போது ஒரு சில கதாநாயகிகள் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவர். சரோஜா தேவியில் இருந்து தமன்னா வரை இந்த பட்டியல் நீளும். ஒரு நடிகை ஹீரோவுடன் டூயட் பாடுவது மட்டுமின்றி, தனக்கென ஒரு பாதையை அமைத்து, அதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது திரையுலகில் மிகவும் அவசியமாகிறது.
அப்படி தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில், தனக்கென கதைகளை உருவாக்கும் சூழலை இயக்குநர்களுக்கு ஏற்படுத்தி, அந்தப் பாதையில் வெற்றியும் பெற்று, தற்போது கதாநாயகர்களுக்கு இணையாக மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா என்று சொன்னால் மிகையாகாது.
கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்த டயானா மரியம் குரியன்தான் இன்று சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும், நயன்தாரா. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், பிறகு மாடலிங் துறையில் நுழைந்து, 2003ஆம் ஆண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கிய 'மனசினக்கரே' என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு 2005-இல் தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த 'ஐயா' என்ற படத்தில் அறிமுகமானவரை, தமிழ் சினிமா அள்ளி எடுத்துக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஒரு நடிகை உச்சத்தில் இருக்கும்போது பல கிசுகிசுக்கள் உலா வரும். இதனால் தனது பட வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டார். இதனால், திரையுலகம் இனி நயன்தாரா அவ்வளவுதான் என ஆருடம் சொன்னது.