சென்னை: தமிழ் திரையுலகில் கின்னஸ் சாதனை புரிந்த ஒப்பற்ற நடிகை மனோரமா. நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த வேடங்களில் நடித்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவர் மறைந்து இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. இளமையில் வறுமை, சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை, பெற்றெடுத்த மகனின் வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என வாழ்வில் அத்தனை துயரங்களையும் அனுபவித்த மனோரமா ரசிகர்களை மகிழ்விப்பதிலேயே எனது மன நிம்மதி இருக்கிறது என்று வாழ்ந்தவர்.
தனது அத்தனை சோகங்களையும் மறைத்து திரையில் அத்தனை அழகாக நடித்து நம்மை சிரிக்க வைத்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பெயரை நிலைநாட்டிய மனோரமா, நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து 'பொன்விழா' கொண்டாடியவர். மனோரமா மன்னார்குடி அருகே உள்ள ஒரு ஊரில் பிறந்தார். மனோரமாவின் தந்தை காசி கிளாக்குடையார், தனது மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு, பத்து மாதக் குழந்தையான மனோரமாவையும், அவரது அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
ஒருநாள் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகி போகவே பள்ளிக்கு போக வேண்டிய வயதில் குடும்ப சூழல் காரணமாக நாடக மேடை ஏறியுள்ளார் மனோரமா. 'கலைமாமணி நாடக சபா' குழுவில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் மனோரமா. ஒரு நாடகத்தில் நடிக்கத் திருமயத்தில் ரயிலேறியதும், நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்ய நாடகக் குழு கொடுத்துவிட, கோவையில் இறங்குவதற்குள் அத்தனை பக்கத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார், மனோரமா. இவர் கலையார்வத்திற்கு இந்த ஒரு நிகழ்வே சிறந்த சான்று.
அதே போல் சினிமா பார்த்து தனது பாடும் திறமையையும் வளர்த்துக்கொண்டார் மனோரமா. அதுவே பிற்காலத்தில் இவர் திரைப்படங்களில் பாட உதவியாக இருந்தது எனலாம். பின்னர் நடிகையாக மாறிய பின் 'மகளே உன் சமத்து' படத்தில் இடம்பெற்ற 'தாத்தா தாத்தா பொடி கொடு' பாடல் தான்,மனோரமா பாடிய முதல் பாடலாகும்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை மனோரமா தான். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள மனோரமா, 1500க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது எனப் பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்.
நடிப்பு மட்டுமிமின்றி நடனத்திலும் சிறந்து விளங்கினார் மனோரமா. ஆனாலும் நடனத்தை முறையாக எங்குமே கற்றுக்கொள்ளவில்லை, அது நடிப்பாகட்டும் நடனமாகட்டும் அத்தனையும் கேள்வி ஞானம்தான். ஆனால், அதை எந்தளவிற்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அந்தளவிற்கு சிறப்பாகச் செய்தார். யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு திரை உலகில் தனித்தன்மை கொண்டவர் நடிகை மனோரமா. நாடி, நரம்பு, சதை, புத்தி, ரத்தம் என எல்லாவற்றிலும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் என்றெல்லாம் புகழப்பட்டவர் புகழப்படுபவர் மனோரமா.
தமிழில் இவரது முதல் படம் 1958இல் மாலையிட்ட மங்கை என்று அறியப்பட்டாலும், 1950ல் சென்னையில் உருவான ஒரு சிங்களப் படத்தில்தான் முதன்முதலில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் வெளியாகவில்லை. பிறகுதான் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் நடித்தார். அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவரை கொஞ்சும் குமரி படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
அப்போது இருந்த நகைச்சுவை ஜாம்பவான்களான சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என அனைவருக்கும் ஈடுகொடுத்து நடித்த ஒரே நடிகை மனோரமா தான். குறிப்பாக நாகேஷ், மனோரமா ஜோடி காமெடி ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. மனோரமா என்றால் தில்லானா மோகனாம்பாள் படத்தை அத்தனை எளிதில் மறக்க முடியாது. ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் சிவாஜியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மாவாக வந்து கம்முனு கெட என்று அனைவரையும் அலற வைத்தார். நடிகன் படத்தில் பேபியம்மா, சின்னக் கவுண்டர் படத்தில் அம்மா வேடம் என இவர் ஏற்று நடித்த அத்தனையும் முத்துக்கள் தமிழ் சினிமாவின் சொத்துக்கள்.
1980 முதல் 2010 வரை கதாநாயகர்களுக்கு அம்மா என்றால் அது மனோரமாதான். அண்ணாமலை, அபூர்வ சகோதரர்கள், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி என தனித்து நின்று விளையாடி உருக வைத்திருப்பார். கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என அன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் இருந்த முன்னணி நடிகர் அத்தனை பேருக்கும் அம்மா என்றால் அது மனோரமா தான். மனோரமா கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் நம் எல்லோரையும் விட்டு பிரிந்து இயற்கை எய்தினார். இன்றுடன் அவர் மறைந்து 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் அவரது சாதனைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து இருக்கும் என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: Jigarthanda DoubleX: ‘இறைவி’ படத்தின் சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா!