சென்னை: கோலிவுட் சினிமாவின் அமுல்பேபி நடிகையாக வலம் வந்தவர், ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம் என பல திரைப்படங்களில் நடத்து பெயர் பெற்றவர், ஹன்சிகா. இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இவரது திருமணம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மண்டோடா கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரைத்துறையினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் ஹன்சிகாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் பகிரப்பட்டது. ஆனால், வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் ஹன்சிகாவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
பின்னர் தான் ஒரு தகவல் தெரிய வந்தது. அதாவது ஹன்சிகாவின் திருமண நிகழ்வை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் 'லவ் ஷாதி ட்ராமா' (Love Shaadi Drama) என்ற நிகழ்வாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த "லவ் ஷாதி ட்ராமா" ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரின் துவக்கத்தில், ஹன்சிகாவும் அவரது தாயும் திருமணத்திற்கு முன் நிகழ்ந்த சிக்கல்களை விவாதித்து, ஹன்சிகாவுடைய கனவு திருமணத்திற்கு குடும்பமாக தயாராகிக் கொண்டிருப்பதை பற்றி கூறுகிறார்கள். ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல திருமணங்களில் ஒன்றாகும். இதை நெருக்கமாக காட்டும் இந்த நிகழ்ச்சி தம்பதிகளின் கடந்த காலத்தைப் பற்றிய தகவல்களையும் வெளிக்காட்டுகிறது.