சென்னை:இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘மார்க் ஆண்டனி’.
இப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விஷாலின் அப்பா, மகன் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம், எல்லா இடங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் இன்று (செப்.21) படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “மார்க் ஆண்டனி படத்தின் மூலம் நான் இழந்தவற்றில் 75 விழுக்காடு எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது” என்றார்.
தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஷால், “நான் பேசத் தொடங்குவதற்கு முன்பாக முதலில் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்” என்று மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர், “ஆதிக் ரவிச்சந்திரன் உடன் படம் பண்ணுகிறேன் என்று சொல்லும்போது நிறைய பேர் எனக்கு போன் செய்து, ஏன் அவருடன் படம் பண்ணுகிறீர்கள், ரிஸ்க் எடுக்குறீர்கள் எனச் சொன்னார்கள். அப்படி சொன்ன எல்லாருமே இன்று பாராட்டுகிறார்கள். ஆதிக்கிடம் அடுத்து கதை கேட்டாலும் கேட்பார்கள். இங்கு வெற்றிதான் பேசும்” என்றார்.
2015ஆம் ஆண்டில் விநாயகர் சதுர்த்தியன்று, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை வெளியிட்டு என் படம் பாயும்புலியை காலி செய்தார், இயக்குனர் ஆதிக். 2012ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் எனது ‘மதகஜராஜா’ திரைப்படத்தை வெளியிட நான் முயற்சி செய்தேன். என் தரப்பு பணத்தை நான் கொடுத்துவிட்டேன்.