சென்னை: தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்தவர், நடிகர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், லத்தி. இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் சண்டக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்து அதிரடி நாயகனாக மாறினார். இதில் தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். ஹரி படங்கள் எப்பவுமே பரபரப்பு காட்சிகள் நிறைந்து தான் இருக்கும். தாமிரபரணி திரைப்படமும் அதே பாணியில் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் பூஜை என்ற படத்தில் இணைந்தது. இப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆகையால், இந்த இருவர் கூட்டணி இணைந்தாலே நல்ல ஆக்ஷன் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ளது. ஹரி கடைசியாக அருண் விஜய் நடித்த 'யானை' படத்தை இயக்கியிருந்தார். இயக்குநர் ஹரி சூர்யா நடிப்பில் 'அருவா' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். நீண்ட வருடங்களாக அது தள்ளிக்கொண்டே போன நிலையில், நடிகர் அருண் விஜய்யை வைத்து 'யானை' படத்தை இயக்கினார்.
தற்போது சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' படத்தில் நடிக்க உள்ளார். இதனால் ஹரி படத்தில் நடிப்பது தள்ளிப்போய் கொண்டே இருப்பதால், இதற்கு இடையில் வேறு ஒரு படத்தை இயக்க ஹரி முடிவெடுத்துள்ளார்.