தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2023, 7:01 PM IST

Updated : Jun 28, 2023, 12:39 PM IST

ETV Bharat / entertainment

Vijay controversy: புகையிலையும் புகார் அலையும்; மூச்சு முட்டும் தமிழ் சினிமா!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'லியோ' பட பாடலில் போதைப்பொருள் குறித்தான வரிகள் மற்றும் புகை பிடித்தல் காட்சிகள் இடம் பெற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் படம் லியோ. இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக உள்ள லியோ படத்தில் பாடல் வரிகளில், போதைப்பொருள் குறித்தும் காட்சிகளில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பத்த வெச்ச புகையிலை:"மில்லி உள்ளே போனா போதும், கில்லி வெளியே வருவான்டா" போன்ற வரிகள் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் உற்சாகம் கொடுக்கலாம். ஆனால் இது போதைப் பழக்கத்தை ஊக்குவிக்காதா என்ற கேள்வி பொதுவாகவே எழுந்துள்ளது. பத்த வெச்சு புகைய விட்டா பவரு கிக்கு போன்றவையும் நேரடியாகவே புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விஜய்க்கு லீகல் நோட்டீஸ்:விஜய்க்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ள சமூக ஆர்வலரான செல்வம் என்பவர் போதைப்பொருள் தடை சட்டத்தின் கீழ் விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே விஜய் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஆன்லைனில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நீதிமன்றத்தையும் நாட திட்டமிட்டுள்ளார் செல்வம்.

சிகரெட்டை விடாத விஜய்:விஜயைப் பொறுத்தவரையிலும் கில்லி, திருமலை, சர்க்கார், தெறி, மெர்சல், மாஸ்டர் தற்போது லியோ என அனைத்துப் படங்களிலும் மாஸ் சீன்களை புகைப்பிடிப்பதை வைத்தே காட்சி படுத்தியுள்ளார். திருமலை படத்தில் சட்டை காலரில் இருந்து சிகரெட்டை ஸ்டைலாக எடுத்த விஜயின் அந்த காட்சிகளுக்கு கை தட்டாத ரசிகர்கள் இருக்கவே முடியாது. இதில் அஜித் ஒன்றும் சளைத்தவர் இல்லை காதல் மன்னன், வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா என தொடர்ந்து தனது படங்களில் நடிகர் அஜித் புகைப்பிடித்திருப்பார்.

சிகரெட் ஸ்டைல் துவக்கியது யார்?:சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை விஜய் ஒன்றும் துவங்கி வைக்கவில்லை. ஆரம்ப காலத்தில் நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனின் புகைபிடிக்கும் ஸ்டைலுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பல படங்களில் அதற்காகவே விதவிதமான காட்சிகள் பல்வேறு ஆங்கிளில் ஷூட் செய்யப்பட்டன. அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு தலைமுறையே ரஜினியின் சிகரெட் ஸ்டைலில் சொக்கியிருந்தது.

புகை நமக்கு பகை:அஜித் குமார், விஜய், தனுஷ், எனப் பலரும் தங்கள் படங்களில் புகை பிடிப்பதை ஒரு தனித்துவமான ஸ்டைலாகவே கடைபிடித்தாலும், சமீப காலங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியதே. ஸ்டைல் மன்னனான ரஜினி காந்த் தமது சமீபத்திய மேடைப்பேச்சியில் புகை, மது மட்டுமல்ல, மாமிசமும் வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார். பாபா திரைப்படத்தில் ரஜினியின் புகை பிடிக்கும் காட்சிகளும், இதற்கு எதிரான போராட்டம் பாமகவின் அரசியலானதும் ரகசியம் அல்ல என்பதை இங்கு நினைவு கூறலாம்.

ஆண்டுக்கு 12 லட்சம் மரணம்:சரி புகை பிடித்தல் சராசரி மனிதனின் வாழ்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை காணலாம். குளோபல் அடல்ட் டெபாக்கோ சர்வேயின் படி, இந்தியாவில் 27 கோடி புகையிலை பயன்படுத்துவோர் உள்ளனர். உலக அளவில் 2 வது மிகப்பெரிய புகையிலை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பட்டியலில் இந்தியா உள்ளது. புகைப்பிடிப்பதால், பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி, வாய், தொண்டை, கணையம், கல்லீரல், சிறுநீரகம், போன்ற உறுப்புகளில் ஏற்படும் கேன்சருக்கும் சிகரெட் ஒரு காரணம். சிகரெட் புகைப்பதால் இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 12 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. சிகரெட்டை பழக்கமாக்கிக் கொண்டவர்கள் இதிலிருந்து விடுபடுவது கடினம் தான் என்றாலும் சிகரெட் இல்லாத வாழ்வை நோக்கிய சிறு அடியும் மகிழ்ச்சி தரக் கூடியதே என்கின்றனர் மருத்துவர்கள்.

சிகரெட்டின் அபாயம் குறித்து உலகம் அறியாத காலத்திலேயே மேற்கத்திய நாடுகளில் கூட்டம் கூட்டமாக புகைத்து மடிந்தனர். இது ஏற்படுத்தும் தாக்கம் புரிந்து கொண்ட பின்னராவது சராசரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடிகர்களும் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:விஜய்யுடன் இணைகிறாரா வெற்றிமாறன்? இயக்குநர் வெற்றிமாறன் கூறுவது என்ன?

Last Updated : Jun 28, 2023, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details