கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உருவெடுத்தவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளிவந்த நான், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கடந்தாண்டு வெளிவந்த சமூக கருத்து பேசும் படமான கோடியில் ஒருவன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் ஆண்டனி, தற்போது 'மழை பிடிக்காத மனிதன்', தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிச்சைக்காரன் 2 (Pichaikkaran-2) படத்தில் நடிப்பதோடு இல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவின் லங்காவி தீவில் நடைபெற்ற போது படகு விபத்தில் விஜய் ஆண்டனி சிக்கினார். இதற்காகத் தாடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வரும் அவர் பிச்சைக்காரன் 2 படத்தின் வேலைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி போட்ட ட்விட் ஒன்று இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதோடு வைரலாக பரவி வருகிறது. 'வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். ANTI BIKILI' என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், வட மாநிலத்தில் இருந்து குடும்ப சூழலுக்காக வேலை தேடி அவர்கள் வந்தாலும், தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாகவும், அவர்களால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் - ஆஷா மீராவுக்கு டும்..டும்..டும்!