சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "பாபா". இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவதாக பாபா என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன், தயாரித்தும் இருந்தார், ரஜினிகாந்த்.
மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். கவுண்டமணி, டெல்லி கணேஷ், ரியாஸ் கான், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டப் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியானபோது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி காட்டும் 'பாபா முத்திரை', குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அதேநேரம் பொருளாதார ரீதியாக இப்படம் தோல்வியைச் சந்தித்தது.