சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இளைய திலகம் என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர். இவர் நடித்த 'சின்னத்தம்பி' திரைப்படம் இப்போது வரை அனைவரின் மனதையும் கவர்ந்த, மிகவும் பிடித்த படமாக உள்ளது. நாயகனாக நடித்துக் கொண்டு இருந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் தவிர, பிற மொழிகளிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் டாக்டராக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபு சிறுநீரக கல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபல திரைப்பட நடிகர் பிரபு (பிப்.20 - 2023) இரவு சிறுநீரகப் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய - பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தங்கலான் படத்தில் இணைந்த ஆஸ்கர் பட நாயகன்!