சென்னை: நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்தாலும், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. இதன் பின்னர் 'தடையற தாக்க' படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக வெற்றி பெற்றார்.
அதனை அடுத்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தனது திரை வாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகர் இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் விஜய் இயக்கத்தில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, நாளை (ஜன.12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அருண் விஜய்யின் முதல் பண்டிகை கால ரிலீஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அருண் விஜய் கூறியபோது, "எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்ஷன்களை விட, இந்தப் படத்தில் ஆக்ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் காட்சிகள் உள்ளது. பல திருப்பங்களோடு பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரை அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும்.