இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இணைந்து நடித்து பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்(RRR). இத்திரைப்படம் உலக அளவில் வெளியான இத்திரைப்படம் ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருதுகளுக்குத் தெலுங்கு சினிமாவின் சார்பில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தைப் பரிந்துரைத்தனர். முன்னதாக பலரும் இந்தத் திரைப்படம் ஆஸ்காவுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட வேண்டுமென்று கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக பாலிவுட் இயக்குநர் அனுரக் கஷயப், ஆர்.ஆர்.ஆர் ஆஸ்காருக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டால் விருது பெற வாய்ப்புண்டு. அந்தத் திரைப்படம் எனக்குப் பிடித்ததா, ஈர்த்ததா என்பது வேறு ஆனால் அது மேற்கு நாடுகளில் பெருவாரியாக ரசிக்கப்படுகிறது. எனக்கு எப்படி அவர்களின் 'Everything Everywhere All at once' திரைப்படம் மிகவும் ஈர்த்ததோ அதைப்போல அவர்களுக்கு 'ஆர்.ஆர்.ஆர்' ஈர்த்துள்ளது" என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை திரைப்படத்தைத் தேர்வு செய்யும் குழுவான இந்தியன் ஃபிலிம் ஃபெடெரேஷன்(IFF) ’ஆர்ஆர்ஆர்’ படத்தை நிராகரித்து குஜராத்திய இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவான ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ திரைப்படத்தை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்து அறிவித்தனர். இந்தியத் தேர்வுக் குழுவின் இந்த முடிவு சில சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியைப் ஏற்படுத்தியது.
வட இந்திய பாலிவுட் சினிமாக்களின் ஆதிக்க மனநிலையில் தான் தென்மாநில திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' புறக்கணிக்கப்பட்டதாகப் பலரும் பேசத் தொடங்கினர்.இன்னும் சிலர், ஆஸ்காருக்கு தேர்வான 'தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ' திரைப்படம் ஃபிரெஞ்சு திரைப்படமான ‘Cinema paradiso' படத்தின் சாயல் என்றும் விமர்சித்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த அதிருப்தி மனநிலை இந்திய ரசிகர்களைத் தாண்டி மேற்கத்திய நாடுகள் வரை நீடித்து நிலைத்தது தான். எந்த அளவுக்கு நீடித்தது என்றால் புலகப் புகழ் பெற்ற ‘Variety' நாளிதழில் இந்தத் தேர்வை விமர்சித்து எழுதும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது. தற்போது வரை ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்த வண்ணம் தான் உள்ளது.
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஒரு ஜனரஞ்சக மாஸ் - கமர்சியல் திரைப்படம். இதுபோன்ற ஒரு இந்திய படத்திற்கு மேற்கத்திய நாடுகளில் இத்தனை வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய விமர்சகர்களில் பலரை இப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை. சில குறைகள் அடங்கிய ஒரு பொழுதுபோக்கு கமர்சியல் படமாகத் தான் தங்களது விமர்சனங்களை எழுதினர்.
தாவிப் பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள், அதி நாடகத் தன்மை கொண்ட வசனங்கள், மாஸ் காட்சிகள் என அக்மார்க் தெலுங்கு மசாலா படத்திற்கான அனைத்து கூறுகளும் 'ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் அடங்கியிருந்தது. இது எப்படி விருது வாங்கும் திரைப்படமாகும் என்பது தான் அனைவரின் கேள்வியும். ஆனால், இங்கு அது முக்கியமல்ல, ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒரு மசாலா திரைப்படமாக இருந்தாலும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராஃபிக்ஸ், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்தும் உலகத் தரம் வாய்ந்ததாகவே அமைந்தது.
தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் பரிந்துரையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுவாக ஆஸ்கார் விருதுகளில் 'சிறந்த வெளிநாட்டு திரைப்படம்' என்ற பிரிவில் தான் ஹாலிவுட் தவிர்த்த அனைத்து நாடுகளும் போட்டி போடும். அந்த வரிசையில் தான் இந்தியன் ஃபிலிம் ஃபெடெரேஷன் இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கத் தேர்வு செய்த 'தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ' போட்டியிடும். ஆனால் அதைத் தவிர்த்துப் பல பிரிவுகள் ஆஸ்கார் விருதுகளில் உண்டு.