சென்னை: கடந்த 2018-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக (ASICON) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட 29 லட்சத்து 50 ஆயிரத்தை திரும்ப கேட்டிருந்தனர்.
இதற்கு, முன்தேதியிட்ட காசோலையை அவர் வழங்கியும், பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ஏ.ஆர்.ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் நேற்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், நோட்டீசை இன்றிலிருந்து 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூகத்தில் அவருக்குள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் ஷப்னம் பானு இன்று ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஏ.ஆர்.ரஹ்மான் பதிலில் பழிவாங்கும் செயல் திட்டமும், தான் தான் பெரியவன் என்ற எண்ணத்தை வெளிக்காட்டுவதாகவும் உள்ளதாகவும், இது துரதிஷ்டவசமானது என்றும் கூறப்பட்டுள்ளது. கொண்டாடப்படும் பிரபலமான ரஹ்மான், இதுபோன்ற அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது என்றும், மருத்துவ சங்கத்திற்கு எதிராக அவதூறாக செயல்பட்டு இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.