சென்னை: நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா எத்தனையோ அரசியல் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அரசியல் படங்கள், கமர்ஷியல் படங்கள், வரலாற்றுக் கதைகள், அரசியல் படங்களில் நிகழ்கால அரசியலை பேசுவது என பலவகையான படங்களைப் பார்த்துள்ளோம். ஆனால், அரசியல் துளியும் இல்லாத ஒரு வணிக கமர்ஷியல் படம் அரசியலால் பட்ட கஷ்டங்களும் அதற்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?.
அது வேறு யாரோ ஒரு நடிகருக்கு நடந்தது அல்ல, தமிழக மக்களால் எப்போதும் தலைவராக போற்றப்படும் எம்ஜிஆருக்கே இது நடந்துள்ளது. ஒரு படத்தை வெளியிடாமல் செய்ய நினைத்தவர்களாலேயே அந்தப் படம் மிகப் பெரிய சரித்திர வெற்றியைப் பெற்ற கதை இது. 1973ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1973ம் ஆண்டு மே 11 ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அடிமைப் பெண், நாடோடி மன்னன் படங்களை தொடர்ந்து எம்ஜிஆர் தயாரித்த மூன்றாவது படம், இயக்கிய இரண்டாவது படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படம் தொடங்கிய காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு பல்வேறு வகையில் பிரச்னைகளும் சறுக்கல்களும் ஏற்பட்டன.
ஆம், திமுகவில் இருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி கருணாநிதியால், எம்ஜிஆர் நீக்கப்படுகிறார். இது தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. ஊரெங்கும் போராட்டங்கள் வெடித்தன. திமுகவினரின் ஏளனப் பேச்சுகளை காது கொடுத்து கேட்க முடியாத எம்ஜிஆர் ரசிகர்கள் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரை சந்தித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வேறு வழியின்றி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அக்டோபர் 17ம் தேதி அதிமுகவை தொடங்குகிறார் எம்ஜிஆர்.
அதற்கு முன்பே உலகம் சுற்றும் வாலிபன் படத்தைத் தொடங்கிவிட்டார். இப்படத்திற்கு முதலில் "மேலே ஆகாயம் கீழே பூமி" என்று தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் தலைப்பை "உலகம் சுற்றும் வாலிபன்" என்று மாற்றுகிறார், எம்ஜிஆர். இரண்டு வேடங்களில் எம்ஜிஆர் நடித்தார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று நாயகிகள். மேலும் நான்காவதாக மேட்டா ரூங்ராத் என்ற தாய்லாந்து நடிகையும் நடித்தார். முதலில் குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பதாக இருந்தது. பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பாளரானார்.
இப்போதெல்லாம் வெளிநாடு செல்வது என்பது அத்தனை சுலபம். ஆனால், அப்போதைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதல்ல. விசா கெடுபிடிகள் அதிகம். எனவே, குறிப்பிட்ட சிலரே வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்றனர். எம்ஜிஆர் , ஜானகி, லதா, மஞ்சுளா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, வசனகர்த்தா சொர்ணம், இயக்குனர் பா.நீலகண்டன், டான்ஸ் மாஸ்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரே தாய்லாந்து சென்றனர்.
வெளிநாட்டு படப்பிடிப்புக்கு கருணாநிதி வந்து எம்ஜிஆரை வழியனுப்பி வைத்தார். ஆனால், படம் வெளியாகும்போது குடைச்சல் கொடுத்ததும் அதே கருணாநிதி தான் என்பது காலம் நடத்திய விளையாட்டுகளில் ஒன்று என்று அப்போது பேசப்பட்டது. எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கிய போது யாராவது பத்து பேர் சத்தமிடுவார்கள், பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் கருணாநிதி நினைத்திருந்தார்.
ஆனால், அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் கருணாநிதி சறுக்கிய தருணங்களில் ஒன்று. அவரே நினைத்துக்கூட பார்க்காத சம்பவங்கள் அரங்கேறின. இதனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட விடக்கூடாது என்ற ஈகோ போட்டியில் அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே மத்திய அரசு ஒருபுறம் எம்ஜிஆருக்கு நெருக்கடி கொடுக்க, திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டு மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளான எம்ஜிஆருக்கு தற்போது படத்தை வெளியிட விடாமல் சதி நடப்பதும் மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் முழு படப்பிடிப்பும் ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து என வெளிநாட்டில் படமாக்கினார். ஒருசில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கி இருந்தனர். ஜப்பானின் எக்ஸ்போ 70 அரங்கில் அத்தனை மக்கள் வெள்ளத்திலும் மிகச் சிறப்பாக காட்சிகளை படமாக்கி அசத்தினார், எம்ஜிஆர். தொழில்நுட்ப ரீதியிலும் உலகம் சுற்றும் வாலிபன் மிரட்டலாக இருக்கும்.
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது கதையே இல்லாமல் படத்தை எடுத்து எடிட்டிங்கில் மேட்ச் செய்து மிகப் பிரமாதமான படத்தை மாற்றினார் என்று எல்லாம் பேசப்பட்டது. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனங்களைப் புரிந்து வைத்திருந்தார், எம்ஜிஆர். அந்த சமயத்தில் திண்டுக்கல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் படத்தை வெளியிட எம்ஜிஆரும், எப்படியாவது வெளியிடாமல் தடுக்க திமுகவும் முட்டி மோதின.
ஒருவழியாக மே 11ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கினார்கள். இதனையடுத்து உங்களது திரையரங்குகளுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டாலும் நான் பொறுப்பேற்கிறேன் என்று எம்ஜிஆர் உத்தரவாதம் அளித்தார். அதனைத்தொடர்ந்து படம் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் அதிமுகவினரே பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னையில் போஸ்டருக்கு வரி உயர்த்தப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து ஸ்டிக்கர்கள் கொண்டுவரப்பட்டு வாகனங்கள், கடைகளில் ஒட்டப்பட்டன. இது ஒரு அரசியல் படம் கிடையாது; மின்னலில் இருந்து கிடைக்கும் சக்தியை எதிரிகள் வசம் கிடைக்காமல் இருக்க அதன் குறிப்புகளை பல்வேறு நாடுகளில் ஒழித்து வைத்துவிடுவார், விஞ்ஞானியான எம்ஜிஆர். இதனை வில்லன் அசோகன் எப்படியாவது கண்டுபிடித்திட போராடும் கதைதான் உலகம் சுற்றும் வாலிபன்.
படம் தொடங்கும் போது எம்ஜிஆர் திமுகவில் இருந்ததால் அரசியல் பஞ்ச் வசனங்கள் எதுவும் படத்தில் இல்லை. ஆனால், படம் வெளியாகும் போது நிலைமையே வேறு. இதனால் படத்தின் தொடக்கத்தில் டைட்டில் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார். "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்" என்ற பாடல் அதிமுகவினருக்கு எனர்ஜியை ஏற்றியது. திமுகவினரால் வசைபாடப்பட்டு வந்த அவர்களுக்கு இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்ற வரிகள் அருமருந்தாக அமைந்தன. இப்போது வரையிலும் அதிமுக கூட்டங்களில் இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஒரு வழியாக 1973ஆம் ஆண்டு மே 11ம் தேதி படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதுவரை இல்லாத அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். திமுகவினர் பேச்சுக்களால் துவண்டிருந்த அதிமுக தொண்டர்களுக்கு இப்படம் எழுச்சியை ஏற்படுத்தியது. மாதக்கணக்கில் முன்பதிவு செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர் படங்களிலேயே அதிக வருமான வரி கட்டிய படமாகவும் இப்படம் மாறியது.
எந்த ஒரு அரசியல் வசனமும் இல்லாத ஒரு படம் திமுகவினரின் செயலால், எம்ஜிஆர் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி எம்ஜிஆர் என்னும் தலைவனை வெளிக்கொண்டு வந்த படமாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது. இதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினரின் மனதில் இப்படம் எப்போதும் நீங்காத இடம் பிடித்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகி போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது எல்லாம் எம்ஜிஆர் என்ற மந்திரம் நிகழ்த்திய ஜாலம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதையும் படிங்க: புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழரின் பாரம்பரிய உடையில் தோன்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்