1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் 'அபூர்வ ராகங்கள்'. இப்படத்தில்தான் சிவாஜி ராவாக இருந்தவர், ரஜினிகாந்தாக முதன்முதலாக நடிகராக திரையில் தோன்றினார். இதற்கு முந்தைய நாளான 17ஆம் தேதி வரை, அவர் சிவாஜி ராவ் தான். இதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்த காந்தத்தின் ஈர்ப்பில் ஒட்டிக்கொண்டது.
'அபூர்வ ராகங்கள்’ படத்தில், ஒன்றரை மணி நேரம் கழித்துதான் ரஜினியின் அறிமுகம் இருக்கும். கதவைத் திறந்து கொண்டு வருவார், ரஜினிகாந்த். தமிழ்த்திரையுலகிற்குள் நுழைய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வழியைக் காட்ட கதவைத் திறந்துகொண்டு வருவதுதான் ரஜினியின் அறிமுகக் காட்சி. அப்போதே இதனைக் குறியீடாக வைத்தார், கே.பாலசந்தர்.
விக்கிரமாதித்தன் கதையில் இடம் பெற்ற, 'ஒரு அப்பாவும், மகனும், முறையே மகளையும், அம்மாவையும் திருமணம் செய்தால், அவர்களின் உறவு முறை என்ன?' என்ற கேள்வி தான், இப்படத்தில் கருவாக மாறியது. வழக்கமான கே.பியின் மரபு மீறல் கதையாக இப்படமும் இருந்தது.
இன்று ரஜினியின் பெயர் திரையில் வந்தால் ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். ஆனால், இப்படம் வெளியாகும்போது ரஜினியின் பெயரை கவனித்தார்களா என்றுகூட தெரியாது. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அபூர்வ ராகங்கள் வெளியானது.
ஏறத்தாழ 47 வருடங்களாகிவிட்டன. 48ஆம் ஆண்டு தொடங்குகிறது. கிட்டத்தட்ட கடந்த 40 வருடங்களுக்கும்மேலாக தமிழ் சினிமாவில் ரஜினிதான் வசூல் வேட்டையன். இன்று வரையிலும் இந்தக் குதிரை எப்போது விழுந்தாலும் உடனே எழுந்து ஓடும். ஓடிக்கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்... ரசிகர்கள் கொண்டாட்டம்