சென்னை:1992ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் தீபாவளி தினத்தன்று வெளியான ‘தேவர் மகன்’ படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. கமல் ஹாசனின் கதை, திரைக்கதையில் உருவான இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கான தனி முத்திரையை இப்படத்திலும் பதித்திருந்தார்.
கெளதமி, ரேவதி, நாசர் மற்றும் வடிவேலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் அழுத்தமாக நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும், இன்றும் பல கிராமங்களிலும் தற்போதைய ரியாலிட்டு ஷோ போட்டியாளர்களிடமும் மவுசு குறையாத ஒன்றாக இருந்து வருகிறது.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் காண்போருக்கு புதிய திரை விருந்தை அளித்து வருகிறது. தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை அள்ளிய இப்படம், ஆஸ்கர் அரங்கிற்கும் பரிந்துரைக்கப்பட்டது. இவை அனைத்தும் வெளிப்பார்வையாக தெரிந்தாலும், படத்தின் உள்ளாந்த கருத்தியலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
முக்கியமாக, குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்துவதுபோல் இருப்பதாகவும், தேவர் மகன் என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் பல்வேறு பிரச்னைகள் உருவாகின. ஆனாலும், தேவர் மகன் திரைக்கதை இன்றும் ஊடக மற்றும் சினிமாத்துறை கல்லூரிகளில் ஒரு பாடமாக இருந்து வருகிறது.