சென்னை: கும்பகோணத்தைச் சேர்ந்த சிறுமி பி.கே.அகஸ்தி(12) என்ற ஏழாம் வகுப்பு மாணவி, "குண்டான் சட்டி" என்ற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார். சிறுமி கதை எழுதி இயக்கிய இப்படத்தை, டாக்டர் எஸ்.ஏ.கார்த்திகேயன் என்பவர் தயாரித்துள்ளார். சிறுமி அகஸ்தி, எட்டு மாதங்களாக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். அரங்கன் சின்னத்தம்பி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.எஸ் அமர்கித் என்பவர், இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(பிப்.12) நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர். கும்பகோணம் அருகே கருப்பூர் என்ற கிராமத்தில் இரண்டு குடும்பத்தில் ஒரே நேரத்தில் பிறக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் ஆகிய இரண்டு குழந்தைகளின் கதை தான் "குண்டான் சட்டி". இதில் ஒருவர் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
மற்றவர்களின் உருவ கேலியை கண்டுகொள்ளாத இரு குழந்தைகளும், அவர்களது கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி ஆகிய மூவரையும் புத்திசாலித்தனமாக ஏமாற்றுகிறார்கள்.
"குண்டான் சட்டி" டிரெய்லர் வெளியீட்டு விழா இந்த மூவரும் சிறுவர்களை பழிவாங்குவதும், அதிலிருந்து சிறுவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதையும் சுவாரசியமாக இயக்குநர் அகஸ்தி பதிவு செய்திருக்கிறார். மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்? என சிறு சிறு விஷயங்களையும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார், பி.கே.அகஸ்தி. இப்படத்தை மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வடக்கனும் சக ஏழைதான்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்' - வைரலாகும் விஜய் ஆண்டனி கருத்து!