2009-ல் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம், அவதார். அப்போது இந்த படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். இப்படத்தைப் பார்த்து ரசித்த மக்கள், தன்னிலை மறந்து பண்டோரா உலகத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டனர். உலகெங்கும் வெளியான இந்தப்படம் சுமார் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
இப்படத்தின் தொடர்ச்சியான ‘அவதார் 2’, உலகெங்கும் சுமார் 160 மொழிகளில் நாளை (டிச 16) வெளியாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 52ஆயிரம் திரைகளில் இப்படம் வெளியாக உள்ளது. அவதார் 2ஆம் பாகத்தோட பட்ஜெட் 390 to 420 மில்லியன் அமெரிக்க டாலர். இப்படம் உலகிலேயே அதிக பொருட்செலவில் உருவான திரைப்படமாகும். இதற்கு முன்னதாக ‘Pirates Of the Caribbean Franchise’-ல் 4ஆவது பாகம் ‘Stranger Tides’ படம்தான் உலகிலேயே அதிக செலவில் உருவான படம். இப்பத்தின் பட்ஜெட் 379 மில்லியன் அமெரிக்க டாலர்.
அவதார் படத்தை 5 பாகமாக வெளியிட ஜேம்ஸ் கேமரூன் முடிவெடுத்துள்ளார். ஆனால், அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தின் வசூலை பொறுத்தே இருக்கும் எனவும் கூறியுள்ளார். அவதார் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், அந்தப் படம் 2024 டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது. அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவில், இந்தியாவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.