மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு எப்படி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது என விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் நாளன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவான அறையிலிருந்து எடுத்துவரப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் வாக்குகள் எண்ணப்படுகிறது.
முதல் சுற்று முடிவுகள் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு சரி பார்த்தவுடன் வெளியிடப்படும். இதன்படி ஒவ்வொரு சுற்றுக்களாக மக்களவைத் தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
இம்முறை சுவிதா என்ற செயலி மூலம் ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இறுதிச் சுற்று முடிந்தவுடன் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் உடன் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட்டு அதனையும் சேர்த்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்குமான 400 கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டுவருகிறது’ எனக் கூறினார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.