மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுகூட்டம் நடத்தப்பட்டது. சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த அக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய தரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கட்கரி பேசுகையில், எட்டு வழி சாலை திட்டம் கட்டாயம் அமைந்தே தீரும். ஒரு சில மாற்றங்கள் செய்து மீண்டும் இந்த பசுமை சாலை அமையும் என்றார். இதற்கு விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சேலம் பூலாவரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழ்நாட்டை விட்டு நிதின் கட்கரி வெளியேற வேண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, கடந்த ஒன்றரை வருடகாலமாக எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடி நீதிமன்றங்கள் சென்று மிகப்பெரிய துயரத்துக்கு உள்ளானோம். எங்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.