தமிழ்நாட்டில் அதிமுக-பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமன்றி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரும் தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் பாஜக சார்பில் எந்தத் தலைவர்களும் பரப்புரைக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முக்கியத் தலைவர்களான தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் மட்டும் ஆரம்பம் முதலே பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையிலோ அல்லது பக்கத்து தொகுதியிலோ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவதில்லை என அதிருப்தி குரல்களும் எழாமல் இல்லை. ஆனால் இவர்களை ஆதரித்து மற்ற கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதிலும் குறிப்பாக அன்புமணி தருமபுரியில் போட்டியிட்டாலும் கூட்டணி கட்சிகளுக்காக பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
2014ஆம் ஆண்டு தேர்தலில் தென்சென்னை பாஜக வேட்பாளராக இல. கணேசன் போட்டியிட்டபோது பாஜக தலைவர் தமிழிசை அங்கேயே முகாமிட்டு தீவிர பரப்புரை செய்தார். பாஜக தொண்டர்கள் தெருவுக்கு தெரு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கூட்டணி தர்மத்தை பாஜக மீறுவதாக அதிமுக தொண்டர்கள் புலம்பிவருகின்றனர்.