தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் சம்பந்தமான புகார்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள், காணொலி கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இதன்படி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள், காணொலி கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 95 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே பறக்கும் படை, நிலையான கண்காணிப்புப் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் எந்த இடத்தில் செல்கிறது என்பதைத் தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணினியின் உதவியுடன் கண்காணிக்கவும் வாகனத்தின் வேகத்தை கண்காணிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.