நாமக்கல்: ‘சென்னை விலாகர்’ என்னும் வலையொளியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தீபன் சக்ரவர்த்தி, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ‘லாரி’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.
செய்தியாளராக எட்டு ஆண்டுகள் பயணித்தவர், ஐயப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த தீபன் சக்ரவர்த்தி. அப்பயணத்தின் மூலம் சமூகத்தின் மீது அவருக்கு அலாதி ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்தத் தமிழ் சமூகத்திற்கு தான் அறிந்த தகவல்கள், தான் தேடிச் செல்லும் தகவல்கள் என அனைத்தையும் பகிர நினைத்த அவர், ‘சென்னை விலாகர்’ என்னும் வலையொளி பக்கத்தை நிறுவினார். அதுமட்டுமில்லாமல் அனைத்து சமூக ஊடகங்களிலும் தன்னை ‘சென்னை விலாகர் தீபன்’ ஆக நிலைநிறுத்தியும் கொண்டார்.
தற்போது தேர்தல் களம் தகித்துக்கொண்டிருக்க, அங்கேயும் களமாடப் புறப்பட்டுவிட்டார் தீபன். ஆம், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முதல் முறையாக அரசியல் களம் காண்கிறார். இதுவே இவரின் முதல்முறை அரசியல் பயணம் என்றாலும், பெரும் செலவுகள் இன்றி, டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகிறார். இது தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்களுக்குப் பெரும் உந்துதலாக இருக்கும் என்று பூரிப்படைகிறார் தீபன்.
"எம்.எல்.ஏ.., எனும் நான்" என்ற வலைத்தொடர் ஒன்றை உருவாக்கி அதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு வேட்புமனு தாக்கல்செய்வது, சின்னம் தேர்ந்தெடுப்பது, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பது, சட்டப்பேரவை உறுப்பினரின் கடமைகள், அவரின் பணிகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் செய்முறைக் காணொலிகளைப் பதிவிட்டுவருகிறார். இது சமூக வலைதளவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாற்றங்களைத் தேடிச் செல்வதைவிட, அதை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தீபன், தனது மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ள லாரியே தனக்குச் சின்னமாகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாகத் தெரிவிக்கிறார். தன்னைப் பின்தொடரும் சமூக வலைதளவாசிகளுக்கு நல்ல தகவல்களைக் கொண்டுச்சேர்க்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு களத்தில் நிற்கும் தீபன் சக்ரவத்தியின் தேர்தல் களமாடலையும் மக்கள் வித்தியாசமானதாக தான் கவனித்து வருகின்றனர்.