தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நூதன முறையில் கடத்தல் நாடகமாடி பணம் பறித்த நபர் கைது..!

கணவரை வேலை இருப்பதாக அழைத்துச் சென்றுவிட்டு, மனைவியிடம் கணவர் கடத்தப்பட்டதாக கூறி நூதன முறையில் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நூதனமுறையில் கடத்தல் நாடகமாடி பணம் பறித்த நபர் கைது..!
நூதனமுறையில் கடத்தல் நாடகமாடி பணம் பறித்த நபர் கைது..!

By

Published : Dec 20, 2022, 10:08 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் சரகம், திருநல்லூரை சேர்ந்த குருமூர்த்தி மகன் ரமேஷ்பாபு (43) ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நன்கு அறிமுகமான கூலி வேலை செய்யும் உத்தமதானியை சேர்ந்த இராமலிங்கம் மகன் உத்திராபதி (25), சென்னையில் ஒரு பெரிய வேலை இருக்கிறது என அழைத்துச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில், ரமேஷ் பாபுவிற்கே தெரியாமல், அவரது மனைவி சரஸ்வதிக்கு அலைபேசியில் அழைத்து, உங்கள் கணவரை சிலர் கடத்தி விட்டனர் என்றும், உடனடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் ரூபாய் 30 ஆயிரம் பணம் செலுத்தினால் விட்டு விடுவார்கள், மேலும் இது குறித்து வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள், காவல்துறைக்கு செல்லாதீர்கள், அப்படி சென்றால், ரமேஷ் பாபுவை கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ்பாபுவின் மனைவி சரஸ்வதி, கணவரை உயிருடன் மீட்க வேண்டுமே என்ற பயத்தில் உடனடியாக, போனில் பேசிய நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூபாய் 30 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். இதனை உறுதி செய்து கொண்ட உத்திராபதி, தன்னுடன் பயணித்த ரமேஷ்பாபுவிடம், ஒன்றும் நடக்காததைப் போல, ’சென்னையில் நாம் சந்திக்க வேண்டியவர் திடீரென வெளியூர் சென்றுவிட்டதால், நீங்கள் இப்படியே ஊர் திரும்பி விடுங்கள், எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என பயணத்தின் பாதி வழியிலேயே கழன்று கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்து ரமேஷ்பாபு, வீடு திரும்பிய பின், மனைவி சரஸ்வதி கூறிய பிறகு தான் தன்னை கடத்தியதாக நாடகமாடி, உத்திராபதி வங்கிக்கணக்கு மூலம் பணம் பறித்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடித்து சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார், மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பாக்கியநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளி பாபநாசம் வட்டம், உத்தமதானியை சேர்ந்த உத்திராபதியை கைது செய்து உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.

நன்கு அறிமுகமான நபரே, நூதன முறையில் கணவரை கடத்தியதாக நாடகம் போட்டு, மனைவியிடம் இருந்து வங்கி பரிவர்தனை மூலம் பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடிக்கப் பணம் இல்லாததால் கொலை செய்தேன்; மூதாட்டியை கொலை செய்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details