திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தலாங்குளம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு (ஜுன் 19) அனைவரும் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
திடீர் தீ
இந்நிலையில் இன்று (ஜுன் 20) அதிகாலை இவரது வீட்டு போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார், 2 பைக்குகள் மற்றும் வீட்டின் கதவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த காவல் துணை ஆய்வாளர் சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
பின்னர் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதற்குள் கார், 2 பைக்குகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், வீட்டின் சுவர் மின் சாதனங்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.