தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி; தப்பிக்க வழி என்ன?

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் பொதுமக்கள் தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள தற்கொலை, கொள்ளை போன்ற விபரீத முடிவுகளை கையிலெடுத்து வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர்.

special story of online gambling
ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி

By

Published : Jan 15, 2022, 6:40 AM IST

சென்னை: கரோனா தொற்று ஊரடங்கினால் வேலையில்லாமல் அவதிப்படும் நடுத்தர வர்கத்தினரை விலைவாசி ஏற்றமும், பொருளாதார மந்தநிலையும் எவ்வழியிலாவது அதிக பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் பெரும் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி ஆசையைத் தூண்டுகிறது.

இதை சாதகமாக்கி பல ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் "குறைந்த பணத்தை முதலீடு செய்து, லட்சமோ, கோடியோ அள்ளிச் செல்லுங்கள்" என்றவாறு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் மக்களின் ஆசையை மேலும் கூட்டிவிடுகின்றனர்.

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டம்

என்னதான் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் "பணமிழக்கும் அபாயம் உள்ளது" என்பதை சுட்டிக்காட்டினாலும், அவர்கள் அதற்கு முன் காட்டிய லட்சம், கோடி என்ற பணத்தாசை, மக்களின் கண்களை மறைத்து ஆன்லைன் சூதாட்டக் குழியில் அவர்களை விழவைத்து விடுகிறது.

அதன்பின் ஆன்லைன் ரம்மி போன்ற பல்வேறு சூதாட்டத்தில் அடிமையாகிப் போகும் நடுத்தர குடும்ப மக்கள் அடுத்த முறை வெல்வோம் என்ற பேராசையால் கையிருப்பைக் கரைத்தும், கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கடனை அடைக்க வழி தெரியாமல் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர். சிலர் ஏற்பட்ட கடனை அடைக்க கொள்ளையடிக்கும் சம்பவங்களிலும் ஈடுபட்டு சிக்கியது கூடுதல் அதிர்ச்சி.

கடந்த ஒரு மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தைத் தொலைத்து, கடனை அடைக்க வழி தெரியாமல் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த தனியார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாக சில லட்சங்களை இழந்துள்ளார். பின்னர் கடன் தொல்லையால் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, மனைவி தாரா, இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்

அதிகரிக்கும் தற்கொலைகள்

அதேபோல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த கோகுல் என்ற 22 வயது இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வீட்டில் வேறு செலவுகளுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து ஆன்லைன் ரம்மியில் தொலைத்ததால் எடுத்த லட்சங்களை மீண்டும் வைக்க முடியாமல் மன உளைச்சலில் விஷம் அருந்தி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று(ஜன.13) சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பிரவுசிங் சென்டர் உரிமையாளரான தினேஷ், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த நிலையில், மன உளைச்சலில் மனைவி, குழந்தைகள் உறங்கியபின் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார்.

இந்த தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தற்கொலைச் சம்பவங்கள் ஒருபுறமென்றால், மற்றொருபுறம் திருவான்மியூர் ரயில் நிலைய ரயில்வே ஊழியர் டீக்காராம் மீனா தன்னை கட்டிப்போட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் கவுண்டரில் இருந்து துப்பாக்கி முனையில் 1.25 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகத் தெரிவித்தார்.

பின் ஐந்து தனிப்படைகள் கொண்ட காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், டீக்காராம் மனைவியுடன் இணைந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.

உளவியல் ரீதியான பிரச்சினை

இவ்வாறு வீணாக செலவழிக்கும் நேரத்தை, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் ஆசையில் மொத்த வாழ்க்கையையே இழந்து நிற்கும் நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என மன நல மருத்துவர் வந்தனாவிடம் கேட்ட போது,

“வேலையில் ஏற்படும் பிரச்சினை, மனசோர்வு, பதட்டம், ஆளுமை தன்மை இல்லாத நபர்களே சூதாட்டத்தில் மூழ்கி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். உளவியல் ரீதியிலான பிரச்சினை காரணமாக அதிகப்படியாக 20 முதல் 45 வயதுக்குட்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர். சூதாட்டத்தில் மூழ்குவது ஒரு வியாதி, அதற்கு மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்றால் மட்டுமே வெளிவர முடியும்” என தெரிவித்தார்.

அரசுதான் முடுவெடுக்க வேண்டும்

இதுகுறித்து சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுகையில், “சூதாட்ட விளையாட்டுகளில் முதலில் பணத்தை வழங்கி ஆசை தூண்டிவிட்டு பின்னர் பணத்தை இழக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனை நம்பி பணத்தை பொதுமக்கள் இழந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். குறிப்பாக, சீனா போன்ற நாடுகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் என தரம் பிரித்து அந்த விளையாட்டை 18 வயதுக்குட்பட்டோர் மட்டுமே விளையாட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவு உள்ளது. நாளொன்றுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே இத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் செலவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போல் நடைமுறைகளை அரசு கொண்டு வந்தால் மட்டுமே தற்கொலையை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உங்களின் காதல் துணை ஒரு நாசீசிஸ்ட் என்னும் சந்தேகமா? - இதோ அதற்கான குறியீடுகள்

ABOUT THE AUTHOR

...view details