சென்னை: சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அலுவலரான காவல் துணைக் கண்காணிப்பாளர் குணவர்மன் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிபிசிஐடியிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிவசங்கர் பாபா பாலியல் வழக்கின் புதிய விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றதும், இவரது தலைமையிலான சிபிசிஐடி காவல் துறையினர் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே, புகாரளித்த மாணவிகள் தவிர்த்து வேறு எத்தனை மாணவிகள் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஆசிரியைகள் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், இந்தத் திடீர் ஆய்வு வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சிவசங்கர் பாபா பிணை மனு தள்ளுபடி