விருதுநகா்: சிவகாசி அருகே பட்டாசு காகித குழாய் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகேயுள்ள ரிசா்வ் லைன் சிலோன் காலனியில், மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலை உள்ளது.
இரண்டு மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் ஃபேன்சி ரக பட்டாசுகளுக்குத் தேவையான காகித குழாய் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாவது தளம் வீடாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. தரைத்தளத்தில் அனுமதியின்றி ஃபேன்சி ரக பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலை உரிமையாளா் ராமநாதன் உள்ளிட்ட சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தரைத்தளத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அதில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விருதுநகர், சிவகாசி பகுதிகளிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துசென்று மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சிவகாசி நேருஜி நகரைச் சேர்ந்த வேல்முருகன் (37), சிலோன் காலனியைச் சேர்ந்த மனோஜ்குமாா் (23) ஆகிய இருவரும் காயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை காவல் துறை உயர் அலுவலர்கள் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இது குறித்து சிவகாசி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.