சேலம்: சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முட்டை என்ற அசாருதீன். இவர்மீது, அழகாபுரம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களில் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக காவல் நிலையங்களில் புகார்கள் உள்ளன. மேலும், ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் இவர்மீது நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள் என்பதால், அசாருதீன் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிறந்த நாள் கொண்டாட்டம், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள பிரதான சாலையில் நடந்துள்ளது. அப்போது, அவருக்கு மாலை போட்டு, கிரீடம் அணிவித்து, ஆடல் பாடலுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. மேலும், அவர் மீது கை வைத்தால் தலையை துண்டித்து தொங்க விடுவோம் என்ற கானா பாடலும் அவரது பிறந்தநாளில் பாடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.