சென்னை: பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை தனது யூ-ட்யூபில் வெளியிட்டுவந்ததற்காக பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
யூ-ட்யூப் பக்கத்தை நிர்வகித்துவந்த மதனின் மனைவி கிருத்திகாவை முன்னதாகவே காவல் துறையினர் கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த மதனை நேற்று (ஜூன் 18) கைதுசெய்தனர்.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மதனை சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர். அப்போது செய்தியாளர்கள் இவரைப் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதில் ஒரு செய்தியாளர், 'மதன் இங்கே பாருங்க' என்று கூற, 'நான் என்ன பிரதமரா'என நக்கலாகப் பதிலளித்துள்ளார். அதற்கு மதனை அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் வினோத் குமார், 'நீ குற்றவாளி வா' என அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
மதனிடம் ஆபாச பேச்சு காணொலி குறித்தும், அதில் பேசக்கூடிய தோழிகள் குறித்தும் விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.