கர்நாடக மாநிலம், நஞ்சன் கூடு பகுதியிலிருந்து ஏசியன் பெயிண்ட் பாரம் ஏற்றிய 12 சக்கர லாரி, கேரள மாநிலம், கொல்லம் செல்வதற்காக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக இன்று (ஜூலை.04) காலை சென்று கொண்டிருந்தது.
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடியைச் சேர்ந்த பாலமுருகன் இந்த லாரியை ஓட்டிய நிலையில், புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள புங்கம்பள்ளி, குளக்கரை வளைவில் லாரி திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கற்களை உடைத்துக்கொண்டு, குளக்கரை சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்தது.
பெயிண்ட் லாரி தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்து உயிர் தப்பிய ஓட்டுநர்
இதன் காரணமாக லாரியில் இருந்த பெயிண்ட் டப்பாக்கள் சரிந்து உடைந்து குளத்துக்குள் விழுந்தன. ஓட்டுநர் பாலமுருகன் இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது. லாரி ஓட்டுநர் தூக்கமில்லாமல் தொடர்ந்து ஓட்டியதால், கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'சிவன் கோயிலில் துணிகர கொள்ளை - காவல்துறையினர் விசாரணை!'