சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 21ஆம் தேதி மாலை டெல்லி செல்லும் விரைவு ரயிலில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீதேஷ்குமார் யோகி (19), அவரது சகோதரர் லோகேஷ் குமார் யோகி (22) ஆகியோர் பயணம்செய்தனர். அவர்கள் இருந்த டி2 பெட்டியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் இருந்துள்ளார்.
ரயில் கிளம்பியதும் அந்த நபர் நீதேஷ்குமார், லோகேஷ் குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வெகுநேரமாக மூன்று பேரும் ரயிலில் பேசிக்கொண்டே வந்தனர். இந்நிலையில், இந்த ரயில் கூடூர் - நெல்லூர் இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் கொடுத்த குளிர்பானத்தை இருவரும் வாங்கிக் குடித்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
நாக்பூரில் கண்விழித்த இளைஞர்கள்
ரயில் நாக்பூர் அருகே வரும்போது, இருவரும் கண்விழித்துப் பார்த்தனர். அப்போதுதான் அந்த நபர் தங்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து தங்களது பணம், செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, நாக்பூர் ரயில்வே காவலர்களிடம் இருவரும் புகார் அளித்தனர். நாக்பூர் ரயில்வே காவலர்கள், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.