தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம்! - சென்னை செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், சடலத்தின் உடல் உறுப்பு மாதிரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

lady corpse found in a decomposing state, lady corpse found in rajiv gandhi hospital, மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம், பெண் சடலம், சென்னை செய்திகள், முக்கிய செய்திகள்
மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம்

By

Published : Jun 10, 2021, 5:52 PM IST

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மௌலி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுனிதாவுக்கு மே 22ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டு மூச்சு திணறல் இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மனைவிக்கு உணவு கொடுப்பதற்காக மௌலி மே 23ஆம் தேதி சென்றபோது, சிகிச்சை பெற்று வந்த அறையில் சுனிதா காணாமல் போயிருந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மௌலி புகாரளித்தார். இதனால் சுனிதாவை மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடிய பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர், மௌலி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சுனிதாவின் புகைப்படம் கொண்டு வர ஹைதராபாத் சென்றுள்ளார்.

பின்னர் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக மௌலியால் புகைப்படத்தை கொண்டுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையின் 8ஆவது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், ஊழியர்கள் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக அந்த பெண் சடலம் ஊழியர்களால் மீட்கப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டது.

மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் வந்த மௌலி, அந்த சடலம் நீண்ட நாட்களாக தேடி வந்த சுனிதா என அடையாளம் காட்டினார். இதனையடுத்து காவல் துறையினர் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலத்தை ஏழு மருத்துவ நிபுணர்கள் உடற்கூராய்வு செய்து உடல் உறுப்புகளில் இருந்து மாதிரிகளை எடுத்து, தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்பதனை உள்ளுறுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடிப்பதற்காக தடயவியல் துறையின் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாவும், அந்த அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளை ஆய்வுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரளித்த பேராசிரியர் மௌலி மற்றும் மருத்துவ பணியாளர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details