சென்னை: திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்த சுரேஷின் மனைவி விஜயலட்சுமி தனது மூன்று குழுந்தைகளுடன் செப்டம்பர் 15ஆம் தேதி திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் பயணித்தார்.
திருவொற்றியூரில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் விஜயலட்சுமி இருந்த பெட்டியில் ஏறிய அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார்.
உடனடியாக விஜயலட்சுமி சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட ரயில்வே காவல் துறை, கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தனிப்படை ஆய்வு
இந்நிலையில் சம்பவம் நடந்த திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தனிப்படை ஆய்வு மேற்கொண்டபோது வழிப்பறி, கொள்ளையர்கள் விட்டு சென்ற செருப்பு கிடைத்தது. மேலும், பழைய குற்றவாளிகளின் படங்களை விஜயலட்சுமியிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியில் அடிக்கடி செல்ஃபோன் பறிப்பில் ஈடுபடும் தினேஷ் என்கிற கிளி (19) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.