சென்னை:குற்றவாளியை இருசக்கர வாகனத்தில் துரத்திப் பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவர் ஆயிரம் விளக்கு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சூழலில், தற்போது இந்தக் கைது சம்பவம் தொடர்பான சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் பிரகாஷ். இவர் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிரீம்ஸ் சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். அப்போது அந்த நபர் உதவி ஆய்வாளரைத் தட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
உடனடியாகச் சுதாகரித்துக்கொண்ட உதவி ஆய்வாளர், தனது இருசக்கர வாகனத்தில் அந்த நபரை சுமார் ஒரு கி.மீ. தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். பின்னர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளி அஜித் (எ) முனுசாமி என்பது தெரியவந்தது.
மேலும், அஜித் பிடிப்பட்டதற்கு சற்று நேரத்திற்கு முன் திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அஜித்தை ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் பிரகாஷ் கைதுசெய்து சம்பந்தப்பட்ட இரு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அஜித் வைத்திருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். சினிமா பாணியில் குற்றவாளியைத் துரத்திப் பிடித்து கைதுசெய்த உதவி ஆய்வாளரின் செயல் பொதுமக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுவருகிறது.