சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர் விஷ்ணுவை மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அவரிடம் செய்த விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இந்த விஷ்ணு, தாகூர் மருத்துவ கல்லூரியில் மருந்தாளராக பணியாற்றி வருகிறார். ரெம்டெசிவிர் மருந்துகளை கோவில்பட்டியில் இருந்து வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. விஷ்ணுவுக்கு கோவில்பட்டி மருந்து கடை உரிமையாளர் சண்முகம் என்பவர் உதவி செய்துள்ளார்.
சென்னை கிழக்கு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த சண்முகம் பெங்களூரில் ரெம்டெசிவிர் மருந்தை மொத்த விற்பனை செய்யும் இடத்தில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் சண்முகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை, திருநெல்வேலியைச் சேர்ந்த இருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுரை, திருநெல்வேலி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் கைதான விஷ்ணுவிடமிருந்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி சமூக வலைத்தளத்திலும் குறுஞ்செய்தி மூலம் பலர் மோசடி செய்வதாக தெரிகிறது. குறிப்பாக போன்பே அல்லது கூகுள் பே ஆகியவற்றின் மூலம் பணத்தை செலுத்தி ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சென்னை கிழக்கு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!