தர்மபுரி: நெசவாளர் காலனியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கொள்ளை நடைபெற்றது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி நெசவாளர் காலனியில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, மங்களாம்பிகை மஹா லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் பௌர்ணமி, பிரதோஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மகாலிங்கேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக புனரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், ஜூலை 2ஆம் தேதி இரவு பூஜைகள் முடித்து கோயில் குருக்கள் ஆலயத்தை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து அக்கோயிலில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோக்களை உடைத்து அதில் உள்ள மங்களாம்பிகைக்கு அணிவிக்கப்படும் அரை பவுன் தங்கத் தாலி, மஹாலிங்கேஸ்வரருக்கு அணிவிக்கப்படும் ஒரு கிலோ வெள்ளி கிரீடம், திருநீர் பட்டை, நான்கு வெள்ளிக்காசுகள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.
இதையடுத்து தகவலறிந்த நகர காவல்துறையினர், திருடுபோன மகாலிங்கேஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்